பாகிஸ்தானில் கோர விபத்து: மலையில் பஸ் மோதி 26 பேர் சாவு

பாகிஸ்தானில் மலையில் பஸ் மோதிய கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-09-22 22:07 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டி நகருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் சில்லாஸ் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ‘பிரேக்’ பிடிக்காமல் போனது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் மரண ஓலமிட்டனர்.

டிரைவர் பஸ்சை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்காததால் பஸ் ஒரு மலையின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோரவிபத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானில் போக்குவரத்து விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததாலும், மோசமான சாலைகள் காரணமாகவும் அடிக்கடி இதுபோன்ற கோர விபத்துகள் நிகழ்கின்றன.

கடந்த மாதம் இதே மாகாணத்தில் குன்தியான் நகரில் பயணிகள் பஸ் ஒன்று ஆற்றுக்குள் விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்