நோயை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை: விமான என்ஜினில் நாணயங்களை வீசிய மருத்துவ மாணவி

நோயை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில், விமான என்ஜினில் மருத்துவ மாணவி ஒருவர் நாணயங்களை வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-09-22 22:13 GMT
பீஜிங்,

சீனாவின் சிச்சுவான் மாகாணம் நன்சங் நகரில் இருந்து சின்ஜிங் நகருக்கு விமானம் சென்றது. இதில் வாங் (வயது 23) என்ற மருத்துவ மாணவி தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார். விமானம் சின்ஜிங் நகரை சென்றடைந்ததும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கி கொண்டிருந்தனர். அப்போது, வாங் விமானத்தின் எஞ்சினை நோக்கி 3 நாணயங்களை வீசி எறிந்தார். இதை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை கையும் களவுமாக பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ள தனது சகோதரியின் மகன் நலம் பெறுவதற்காக நாணயங்களை வீசியதாகவும், அது சட்டவிரோதம் என தெரியாது எனவும் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து, அவருக்கு 200 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது.

சீனாவை பொறுத்தவரையில் கோவில் மணி மற்றும் பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்டவற்றின் முன் நாணயங்களை வீசினால், அது தீயசக்தியையும், நோயையும் விரட்டி நன்மை தரும் என மக்கள் நம்புவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்