பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவு

பிலிப்பைன்சில் உள்ள மின்டானோவ் தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது.

Update: 2019-09-29 22:30 GMT

* இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள அம்போன் நகரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துவிட்டது. சுமார் 25 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

* அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

* ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அல் மாரா பிராந்தியத்தில் இருந்து சோகோத்ரா தீவு நோக்கி 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று திடீரென மாயமானது. அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மாயமான படகை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

* பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானோவ் தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம் சாட்டி வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனும் ஈரான் மீது அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பஹ்ரைன் வெளியுறவு மந்திரி காலித் பின் அகமது பின் முகமது அல் கலிபா வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்