சீனாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ; 19 பேர் சாவு

சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-09-30 03:01 GMT
பீஜிங்,

சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள நிங்காய் நகரில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், இங்குள்ள வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக தொழிற்சாலைக்குள் தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவியது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். ஆனால் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 19 தொழிலாளர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். அதே சமயம் பலத்த தீக்காயங்களுடன் 8 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.

சீன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால் அடிக்கடி இதுபோன்ற கோர விபத்துகள் நடக்கின்றன. கடந்த மார்ச் மாதம் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 78 பேர் பலியானது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்