தாய்லாந்து கோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு நீதிபதி தற்கொலை முயற்சி

தாய்லாந்து கோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டு நீதிபதி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-10-06 22:44 GMT
பாங்காக்,

தாய்லாந்தில் உள்ள யாலா நகர கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் கனகோர்ன் பியன்சனா. யாலா நகரில் நடைபெற்ற கொலை வழக்கை அவர் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து, 3 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு சிறை தண்டனையும் வழங்கும்படி கனகோர்ன் பியன்சனாவை தலைமை நீதிபதிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் நீதிபதி கனகோர்ன் பியன்சனா விடுவித்தார். தீர்ப்பை வாசித்து முடித்ததும் அவர் தனது இருக்கையில் அமர்ந்த படியே செல்போனை எடுத்து ‘பேஸ்புக்’ நேரலையில் பேசினார்.

அப்போது அவர், “ஒருவருக்கு தண்டனை வழங்கவேண்டுமானால் அதற்கு தெளிவான ஆதாரங்கள் வேண்டும். அப்படி ஆதாரம் இல்லாதபட்சத்தில் யாருக்கும் தண்டனை வழங்காதீர்கள். தவறான ஆட்களை பலிகடா ஆக்காதீர்கள்” என்று கூறிவிட்டு துப்பாக்கியை எடுத்து தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டார்.

இதை கண்டு கோர்ட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய்லாந்து நீதித்துறையில் ஊழல் மலிந்திருப்பதாகவும், அதை மாற்ற பல முறை முயற்சித்தும் அரசியல் அழுத்தங்களால் முடியவில்லை என்றும் குற்றம்சாட்டப்படும் நிலையில், பணி அழுத்தம் காரணமாக கோர்ட்டுக்குள்ளேயே நீதிபதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்