ராணுவத்தில் பெண்கள் சேரலாம் சவுதி அரேபிய அரசு அறிவிப்பு

ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்களும் சேரலாம் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது

Update: 2019-10-10 12:03 GMT
ரியாத்

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, 21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் யார் விண்ணப்பித்தாலும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள, கணவர் அல்லது தந்தையின் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

துணை ராணுவப் படையான பாதுகாப்பு படைகளில் பெண்கள் சேருவதற்கும் கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படைகளிலும் பெண்கள் சேரலாம் என சவூதி அரசு அறிவித்துள்ளது.

இது, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அடுத்த நடவடிக்கை என சவூதி வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் வளம் என்பதையும் தாண்டி, சமூக-பொருளாதாரத் திட்டங்களை விரிவுபடுத்தி வரும் சவூதி அரேபியா, 49 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதிக்கு சுற்றுலா வரும் வகையில் அதற்கான விசா வழங்கப்படும் என அண்மையில் அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்