எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-11 09:16 GMT
ஆஸ்லோ,

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதார துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தநிலையில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மற்ற நோபல் பரிசுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வழக்கத்தின்படி, உலக அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு வழங்கப்படுவதாக நோபல் குழு, நேற்று ஆஸ்லோவில் அறிவித்தது.

“அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்காக அபி அகமது முயற்சி எடுத்தார். குறிப்பாக அண்டை நாடான எரித்ரியாவுடனான 20 ஆண்டு கால மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தார். அதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு அபி அகமதுவுக்கு வழங்கப்படுகிறது” என நோபல் குழு அறிவித்தது.

43 வயதே ஆன இளம் தலைவரான அபி அகமது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ந் தேதி எத்தியோப்பிய பிரதமர் பதவியை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தொடங்கினார். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினரை விடுதலை செய்தார்.

எரித்ரியாவுடனான 20 ஆண்டு கால மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். இதுதான் இப்போது அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை தேடித்தந்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு சுமார் 9 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6 கோடியே 30 லட்சம்) ரொக்க தொகை, ஒரு தங்க பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை கொண்டதாகும்.

டிசம்பர் மாதம் ஆஸ்லோவில் நடக்கிற விழாவில் அபி அகமதுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்