மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 9 பேர் பலி

மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-10-12 13:38 GMT
மெக்சிகோ,

மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம்  சான் ஜூவான் டெல் ரியோ நகரில் சென்ற பயணிகள் பஸ் ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தலைகீழாக கவிழ்ந்தது. இந்த பஸ்சின்  இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரெயில் வருவது தெரிந்தும் பஸ் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்