5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது

5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது சேதம் குறித்த விவரம் இல்லை.

Update: 2019-10-14 12:18 GMT
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் மலை பகுதியை மையமாகக்கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவு கோலில் 5.8 பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா பகுதியை தாக்கியது. கைபர் பக்துன்க்வா மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (பி.டி.எம்.ஏ) செய்தித் தொடர்பாளர் தைமூர் அலி கூறுகையில், பெஷாவர், மலகண்ட், மர்தான், சர்சத்தா, அட்டாக் மற்றும் ஹசாரா ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்  இருந்தது என கூறினார்.

ஷாங்க்லா, கோஹிஸ்தான், பட்டாகிராம், டோர்கர், ஸ்வாட் மற்றும் நாட்டின் பிற வடக்குப் பகுதிகளிலும்  உணரபட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இன்றைய நிலநடுக்கத்தால் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாதம் 26  ஏற்பட்ட இதே அளவிலான நிலநடுக்கத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் சாலை உள்கட்டமைப்பு சேதமடைந்தன.

மேலும் செய்திகள்