மத அவமதிப்பு கருத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு; 4 பேர் சாவு

வங்காளதேசத்தில் மத அவமதிப்பு கருத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-10-21 19:45 GMT
டாக்கா,

வங்காளதேசத்தின் போலா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் முகநூல் கணக்கில் இருந்து மாற்று மதத்தை அவமதிக்கும் கருத்துகள் வெளியாகி இருந்தது. இது அந்த மதத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துகளை கண்டித்து போலா மாவட்டத்தின் சார் பொகருத்தின் பகுதியில் மாபெரும் போராட்டம் நடந்தது.

இதில் பயங்கர வன்முறை வெடித்தது. போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். எனவே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய கருத்து வெளியான முகநூல் கணக்கு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர், தனது முகநூல் கணக்கை முடக்கி அதன்மூலம் வேறு சிலர் அந்த கருத்தை வெளியிட்டதாக புகார் அளித்தார். அதன் பேரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வன்முறை சம்பவம் வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்