மாலி நாட்டில் ராணுவ சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 53 வீரர்கள் பலி

மாலி நாட்டில் ராணுவ சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 வீரர்கள் பலியாகினர்.

Update: 2019-11-02 23:30 GMT
பமாக்கோ,

மாலி நாட்டில் ராணுவ சாவடி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி. இங்கு மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் அவ்வப்போது நாசவேலைகளில் ஈடுபட்டு, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துகின்றனர். அவர்களை ஒழித்துக்கட்ட முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டில் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் ராணுவ சாவடி ஒன்று செயல்பட்டு வந்தது. இது முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சாவடியை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் அதிரடியாக முற்றுகையிட்டு, துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். இதை எதிர்கொள்ள முடியாமல் ராணுவ வீரர்கள் நிலை குலைந்து போயினர்.

இந்த தாக்குதலில் 53 வீரர்கள் பலியாகினர். உள்ளூர் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்தி விட்டு பயங்கரவாதிகள் சிட்டாகப்பறந்து விட்டனர்.

தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும், அங்கு அந்த நாட்டு அரசு கூடுதல் படைகளை அனுப்பி வைத்தது.

இதுபற்றி மாலி தகவல் துறை மந்திரி யாயா சங்காரே கூறுகையில், “ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் 10 வீரர்கள் தப்பி உள்ளனர்” என்றார்.

ஒரே நேரத்தில் 53 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது, அந்த நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலத்தில் அங்கு நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த மாதம் புர்கினோ பாசோ நாட்டு எல்லையில், 2 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 25 படை வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்