ஆப்பிரிக்க நாட்டில் தங்க சுரங்க ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு; 37 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டபோவ் மாகாணத்தில் போன்கியுவ் நகரில் கனடா நாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான தங்க சுரங்கம் உள்ளது.

Update: 2019-11-07 23:15 GMT
வாகடூகு, 

தங்க  சுரங்கத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வழக்கம் போல் 5 பஸ்களில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.

அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் ராணுவவீரர்கள் வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுரங்க தொழிலாளர்கள் இருந்த 2 பஸ்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கண்இமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதலை நடத்திவிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் 37 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 60 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே போல் கனடா தங்க சுரங்கத்தின் ஊழியர்கள் பஸ்களில் அணிவகுத்து சென்றபோது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்