மெக்சிகோ துப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி கேட்ட சிறுவன்

அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவில் குடியேறி அங்குள்ள லா மோரா நகரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

Update: 2019-11-07 23:30 GMT
மெக்சிகோ சிட்டி, 

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பவிஸ்ப் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை ஒரு காட்டு பகுதியில் ஆயுதம் ஏந்திய போதைப்பொருள் கும்பல் வழிமறித்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது.

இதில் 3 கார்களிலும் தீப்பிடித்து 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடத்தல் கும்பல் தங்கள் எதிரிகளை தாக்குவதாக நினைத்து தவறான தாக்குதலை நடத்திவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் உயிர் தப்பிய 13 வயது சிறுவன், 23 கிலோ மீட்டர் நடந்தே சென்று தனது குடும்பத்தினரை காப்பாற்ற உதவி கோரிய உருக்கமான தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தாக்குதலின்போது அந்த 13 வயது சிறுவன், 7 மாத குழந்தை உள்பட தனது உறவுக்கார சிறுவர்கள் 7 பேரை காப்பாற்றி அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து சென்றதும் உறவுக்கார சிறுவர்களை புதரிலேயே இருக்க சொல்லிவிட்டு, காட்டுப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு 6 மணி நேரத்தில் 23 கி.மீ. நடந்தே சென்று உதவி கோரினான். அதன் பின்னரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டனர்.

மேலும் செய்திகள்