நெதர்லாந்தில் விமானியின் தவறால் விமான நிலையத்தில் பதற்றம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஷிபோல் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

Update: 2019-11-07 23:45 GMT
ஆம்ஸ்டர்டாம், 

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு இங்கிருந்து நேற்று முன்தினம் ‘ஏர் யூரோபா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தின் உள்ளே பயணிகள் அமர்ந்து இருந்தனர்.

அப்போது அந்த விமானத்தில் இருந்து, விமான கடத்தல் தொடர்பை தெரிவிக்கும் அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. டச்சு ராயல் ராணுவ போலீசார் ஆயுதங்களுடன் விமானத்தை சுற்றி வளைத்தனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. சற்று நேரத்தில் விமான நிலையம் உச்சகட்ட பரபரப்புக்குள்ளானது.

ஆனால் சில மணி நேரத்துக்கு பிறகே விமானி தவறுதலாக, விமான கடத்தல் தொடர்பை தெரிவிக்கும் அபாய ஒலியை எழுப்பிவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றன.

அதன்பிறகே விமான நிலையத்தில் இயல்புநிலை திரும்பியது. இந்த பரபரப்பு காரணமாக பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று ‘ஏர் யூரோபா’ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்