ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகம் அருகே கார் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

Update: 2019-11-13 06:02 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் கொசாபா என்ற இடத்தில் அந்த நாட்டின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. காபூல் சர்வதேச விமான நிலையமும் இதன் அருகில்தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி காலை 7.25 மணிக்கு உள்துறை அமைச்சகத்துக்கு வெளியே வெடிகுண்டுகள் நிரப்பிய கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் எரிந்து தீக்கிரையாகின. அந்த பகுதியை கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. அந்த கார் குண்டு வெடிப்பில் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

மேலும் செய்திகள்