ஓமனில் மழைநீரில் மூழ்கி 6 இந்தியர்கள் சாவு: மதுரையை சேர்ந்த தொழிலாளியும் பலியான பரிதாபம்

ஓமன் நாட்டில் மழை நீரில் மூழ்கி மதுரையை சேர்ந்த தொழிலாளி உள்பட 6 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

Update: 2019-11-13 23:15 GMT
மஸ்கட்,

அரபு நாடான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்திய தொழிலாளர்கள் மண் சரிந்து பலியானதாக முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர்கள் நிலத்தடியில் 50 அடி ஆழத்தில் மழைநீர் குழாய் பதிக்கும் பணியின்போது நீரில் மூழ்கி பலியானதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஓமன் நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அல் சீப் பகுதியில் மழைநீர் வெளியேறுவதற்கு வசதியாக நிலத்தடியில் ராட்சத கான்கிரீட் குழாய்கள் பதிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அங்கு சுரங்கம் அமைத்து கான்கிரீட் குழாய்களை நிலத்தடியில் பொருத்தும் பணியில் 2 தனியார் நிறுவனங்கள் சார்பில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் அங்கு சுமார் 50 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டு இருந்த 1,000 அடி நீளமுள்ள ராட்சத குழாயின் உள்ளே இறங்கி குழாய்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென்று அங்கு கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் மழைவெள்ளம் பெருக்கெடுத்து கான்கிரீட் குழாய் உள்ளே நுழைந்தது. குழாயில் இருந்து வெளியேற வழி இல்லாததால் 6 தொழிலாளர்களும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் தொழிலாளர்களை தேடினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 6 தொழிலாளர்களும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், உயிரிழந்த 6 தொழிலாளர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டது. இதில், மதுரையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயணா (22), பீமா ராஜு (30), பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் பார்த்தி (29), விஷ்வகர்மா மஞ்சி (29), உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விகாஷ் சவுகான் மஹாதேவ் (27) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய தூதரகம் உதவியுடன் 6 தொழிலாளர்களின் உடல்களையும் விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பணியில் இருந்தபோது உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்துக்கும் உரிய இழப்பீட்டை வழங்க ஓமன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்