ஈரான் போராட்டத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு - போராட்டக்காரர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை

ஈரானில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. போராட்டக்காரர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-11-18 23:00 GMT
டெஹ்ரான்,

ஈரானில் பெட்ரோல் மீதான மானியம் நீக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு அறிவித்தது. இதனால் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒரு மாதத்துக்கு 60 லிட்டருக்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்குமான விலை 10 ஆயிரம் ரியால்களில் இருந்து 30 ஆயிரம் ரியால்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு அறிவித்தது. எனினும் பெட்ரோலின் விலையை திடீரென 3 மடங்கு உயர்த்தியதால் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் டெஹ்ரான் உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய மாகாணமான சிர்ஜான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் கிடங்குகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆனால் போராட்டத்தில் பல நபர்கள் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதன் காரணமாக போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க பாதுகாப்புபடையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போராட்டத்தை கலைக்க பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர்.

இதே போல் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்களில் 35 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆனது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே போராட்டத்தால், நாட்டில் பாதுகாப்பின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி போராட்டக்காரர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “மக்களுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் இது வன்முறை. வன்முறையினால் நாட்டில் பாதுகாப்பின்மை ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என கூறினார்.

இதற்கிடையே போராட்டம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இணையள சேவையை அரசு முடக்கி வைத்துள்ளது.

இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அபாயகரமான படையை அரசு பயன்படுத்தி வருவதாக கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டங்களை நடத்தி வரும் ஈரானிய மக்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. அவர்கள் மீது அபாயகரமான படையை உபயோகிப்பதையும், தகவல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்