சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரி - 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு, 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-11-23 22:15 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க உளவுத்துறையில் (சி.ஐ.ஏ.) அதிகாரியாக இருந்தவர் ஜெர்ரி சுன் ஷிங் லீ (வயது 55). இவருக்கு நாட்டின் முக்கிய ராணுவ ரகசியங்கள் தெரியும். இவர் மூலமாக சில முக்கிய ராணுவ ரகசிய தகவல்களை பெறுவதற்காக சீனா தரப்பில் 1 லட்சம் டாலர் ரொக்கம் தருவதாக விலை பேசி உள்ளனர். அது மட்டுமின்றி இந்த ஒத்துழைப்புக்காக ஆயுள்காலம் முழுவதும் கவனித்துக்கொள்வோம் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஜெர்ரி சுன் ஷிங் லீ, இணங்கியதுடன், பணத்துக்காக சொந்த நாட்டுக்கே துரோகம் செய்து விட்டார். சீனாவுக்காக உளவு வேலை பார்த்து முக்கிய தகவல்களை அளித்துள்ளார். அவர் சீன தரப்பில் பெற்ற லஞ்ச பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து இருக்கிறார்.

இதையெல்லாம் அமெரிக்கா கண்டுபிடித்து விட்டது.

இதைத் தொடர்ந்து லீயை கைது செய்து அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது தன் மீதான உளவு குற்றச்சாட்டுகளை லீ ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 19 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவு எப்.பி.ஐ.யின் வாஷிங்டன் அலுவலக உதவி இயக்குனர் தீமொத்தி சிலேட்டர் ஒரு செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்