அல்பேனியாவில் கடும் நிலநடுக்கம்: 14 பேர் பலி; 600 பேர் காயம்

அல்பேனியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலியாகி உள்ளனர். 600 பேர் காயமடைந்துள்ளனர்.

Update: 2019-11-26 13:52 GMT
திரானா,

அல்பேனியா நாட்டின் கடலோர பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.  இதன்பின்பு தொடர்ச்சியாவும் பல்வேறு அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன.

அல்பேனியாவின் தலைநகர் திரானாவில் இருந்து 30 கி.மீ. வடமேற்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் குவிந்தனர்.

நிலநடுக்க பாதிப்பினால் திரானாவில் இருந்து வடக்கே 36 கி.மீ. தொலைவில் அமைந்த துமனே நகரில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின.  கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சிக்கி ஆண் மற்றும் பெண் என இருவர் பலியாகியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

திரானாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள குர்பின் நகரில் வீட்டில் இருந்து அச்சத்தில் கீழே குதித்த நபர் ஒருவர் பலியானார்.

இதேபோன்று திரானாவின் மேற்கே 33 கி.மீ. தொலைவில் டர்ரெஸ் நகரில் கட்டிடம் இடிந்ததில் மற்றொரு நபர் கொல்லப்பட்டார்.  இதுவரை 4 பேர் நிலநடுக்க பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.  பின்பு இந்த எண்ணிக்கை 6 ஆகவும், பின்னர் 14 ஆகவும் உயர்ந்து உள்ளது.  600க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனால் அதிகம் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறும்படி அதிகாரிகளால் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.  தங்கள் குடியிருப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன என சிலர் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து வீடுகளை விட்டு திறந்தவெளி பகுதிகளை நோக்கி பலர் ஓடி பாதுகாப்பு தேடி கொண்டனர்.

துமனே நகரில் மின் விநியோக மையம் மற்றும் 3 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் அல்பேனியாவில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.  கடந்த செப்டம்பரில் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

இதேபோன்று அருகிலுள்ள போஸ்னியா நாட்டிலும் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.  எனினும் பெரிய அளவிலான சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டு உள்ளது.  அல்பேனியாவில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்