அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்

அமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு வாழைப்பழம் ஒன்று ஏலம் போனது.

Update: 2019-12-09 23:30 GMT
வாஷிங்டன்,

இத்தாலியை சேர்ந்த பிரபல கைவினை கலைஞர் மரிஷியொ கேட்டலன் வித்தியாசமான கலை பொருட்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். கடந்த 2016-ம் ஆண்டு 18 கேரட் தங்கத்தை கொண்டு 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடியே 88 லட்சம்) மதிப்பில் தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார். இதனால் மரிஷியொ கேட்டலனின் கலை படைப்புகளை வாங்குவதற்கு பெரும் போட்டா போட்டி இருக்கும்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்து வரும் கலைபொருட்களுக்கான சர்வதேச கண்காட்சியில் மரிஷியொ கேட்டலன் சாதாரண ஒரு வாழைப்பழத்தை கலை படைப்பாக மாற்றினார். கண்காட்சி நடைபெற்ற ஓட்டல் அறையின் சுவரில் வாழைப்பழத்தை ‘டேப்’ கொண்டு ஒட்டிவைத்தார். இதில் என்ன அதிசயம் அற்புதம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆம் அதிசயம்தான், இது ஒரு அற்புத படைப்பு என்கின்றனர் கண்காட்சியை பார்வையிட வந்தவர்கள்.

மரிஷியொ கேட்டலன் தன்னுடைய இந்த படைப்புக்கு ‘காமெடியன்’ என பெயர் சூட்டி உள்ளார். அவரது இந்த படைப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த வாழைப்பழம் ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் மக்களின் பார்வைக்காக தொடர்ந்து அதே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை பார்வையிட வந்த அனைவரும் அந்த வாழைப்பழத்துடன் ‘செல்பி’ படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல கலைஞரான டேவிட் டதுனா கடந்த சனிக்கிழமை இந்த சர்வதேச கண்காட்சிக்கு வந்தார். அப்போது அவர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மரிஷியொ கேட்டலனின் கலை படைப்பான வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். டேவிட் டதுனா, வாழைப்பழத்தை உண்பதை பார்த்து அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் கோபமடைந்தார். எனினும் டேவிட் டதுனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் ஒட்டிவைக்கப்பட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்