அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலி

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலியானார்கள்.

Update: 2019-12-11 02:09 GMT
நியூயார்க்,

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணம் ஜெர்சி நகரில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் அங்குள்ள ஒரு இடுகாட்டில் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அவர்களிடம் விசாரிப்பதற்காக போலீசார் அங்கு சென்றனர். போலீசார் அவர்களை அணுகியபோது அவர்கள் 2 பேரும் திடீரென போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஜோசப் சீல்ஸ் (வயது 39) என்ற போலீஸ் அதிகாரியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதில் போலீசாருக்கும், அந்த மர்ம நபர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. ஆனால் போலீசார் அயர்ந்த நேரம் பார்த்து அந்த மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்த ஒரு வேனில் ஏறி தப்பி சென்றனர்.

போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். பின்னர் தப்பிக்க வழிதேடிய அந்த மர்ம நபர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உடனடியாக மூடப்பட்டன.

அதனை தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போலீசார் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்கள் பதுங்கியிருந்த அந்த சூப்பர் மார்க்கெட் சுற்றிவளைக்கப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே சுமார் 4 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதன் பின்னர் போலீசார் அதிரடியாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மர்ம நபர்கள் 2 பேரை சுட்டுக்கொன்றனர்.

ஆனாலும் முன்னதாக அந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்த அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகினர்.

மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்