ஒரே வாரத்தில் 2-வது முறையாக செயற்கைகோள் ஏவுதளத்தில் வடகொரியா முக்கிய சோதனை

அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-12-14 21:56 GMT
சியோல்,

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் ஓரளவுக்காவது திரும்ப பெறப்பட வேண்டும் என்று வடகொரியா விடாப்பிடியாக கூறி வருகிறது. இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்காவுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளோம், அது நடைபெறாவிட்டால் நாங்கள் வேறு புதிய வழியை பின்பற்றுவோம் என வடகொரியா அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த 7-ந் தேதி வடகொரியா, சோஹே செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து முக்கிய சோதனை ஒன்றை நடத்தியது. அந்த சோதனை முக்கியமான சோதனை என்றும், அது வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறியது. ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 10.45 மணிக்கு அதே சோஹே செயற்கைகோள் ஏவுதளத்தில் முக்கிய சோதனை ஒன்றை நடத்தியதாகவும், இந்த சோதனையை அணுசக்தி தடுப்பை அதிகரிக்கும் வகையில் செய்துள்ளதாகவும் வடகொரிய அரசு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த சோதனை பற்றிய கூடுதல் விவரங்களை வட கொரியா வெளியிடவில்லை. இந்த சோஹே ஏவுதளத்தை மூடி விடுவதாக அமெரிக்காவிடம் வடகொரியா ஏற்கனவே வாக்குறுதி அளித்தது.

அமெரிக்கா கடந்த வியாழக்கிழமையன்று நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ள நிலையில், அதற்கு மறுநாளே வடகொரியா முக்கிய சோதனை ஒன்றை நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

வடகொரியாவுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஸ்டீபன் பீகன், தென்கொரிய தலைநகர் சியோலுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருவதும், வடகொரியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று இன்னும் நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்