ஈரானில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்

ஈரானில் உள்ள புஷேர் அணு உலை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

Update: 2019-12-27 05:14 GMT
டெஹ்ரான்,

ஈரானின் தெற்கு பகுதியில் பாரசீக வளைகுடா கடற்கரையையொட்டி அமைந்துள்ள புஷெர் மாகாணத்தில் போரஸ்ஜான் நகரில் புஷெர் அணுமின் நிலையம் உள்ளது. இது ஈரானிடம் இருக்கும் ஒரே ஒரு அணுமின் நிலையம் ஆகும்.

இந்த நிலையில் புஷெர் அணுமின் நிலையம் அருகே அமைந்து உள்ள கலாமெஹ் நகரில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 38 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்றும், புஷெர் அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்த நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்