ஜெர்மனியில் உயிரியல் பூங்காவில் பயங்கர தீ

ஜெர்மனியில் உயிரியல் பூங்காவில் பயங்கர தீ ஏற்பட்டது.

Update: 2020-01-02 22:00 GMT
பெர்லின், 

ஜெர்மனியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் உள்ள கிரபெல்டு நகரில் பழமைவாய்ந்த உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு சிங்கம், புலி, யானை, குரங்கு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த உயிரியல் பூங்காவில் கடந்த 1975-ம் ஆண்டு 2000 சதுர மீட்டர் பரப்பளவில் குரங்குகளுக்கான பிரத்யேக சரணாலயம் திறக்கப்பட்டது. இதில் கொரில்லா, சிம்பன்சி, ஒராங்குட்டான் உள்பட பல்வேறு இனங்களை சேர்ந்த 32 குரங்குகள் இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த குரங்குகள் சரணாலயத்தில் திடீரென தீப்பிடித்து. கண்இமைக்கும் நேரத்தில் தீ, சரணாலயம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் சரணாலயம் முற்றிலுமாக எரிந்துவிட்டது. இதில் சரணாலயத்தில் இருந்த 30 குரங்குகள் தீயில் கருகி செத்தன. 2 சிம்பன்சி குரங்குகள் மட்டுமே உயிர் தப்பின. உயிரியல் பூங்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, தடை செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றியதே தீவிபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்