பாரீஸ் புறநகரில் கத்திக்குத்தில் ஒருவர் பலி: தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை

பாரீஸ் புறநகரில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Update: 2020-01-04 23:45 GMT
பாரீஸ், 

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர், வில்லேஜூயிப். நேற்று முன்தினம் இங்குள்ள பூங்கா ஒன்றில் 22 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென கத்தி எடுத்து, கண்ணெதிரே வந்தவர்களை சரமாரியாக குத்த தொடங்கினார். இதைப்பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் எடுத்தனர்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். கத்திக்குத்து நடத்திய நபரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். முன்னதாக அந்த நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் அவர் மனநிலை பாதித்த நபர் என தெரிய வந்தது. அதே நேரத்தில் அவர் வைத்திருந்த பையில், மத ரீதியிலான பொருட்கள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவர் நடத்திய தாக்குதலில் பலியானவருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர் பெயர் நாதன் என்றும், அவர் கத்தியால் குத்தியதில் பலியானவர் மனைவியுடன் பூங்காவுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்