சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலி

சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலியாயினர்.

Update: 2020-01-21 22:43 GMT
பீஜிங்,

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த மர்ம வைரஸ் காய்ச்சல், நாட்டின் தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

வுகான் நகரில் 15 மருத்துவ ஊழியர்களையும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கியுள்ளதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வைரஸ் தாக்கிய நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததால் மருத்துவ ஊழியர்களை தொற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இப்போது இந்த கொரோனா வைரஸ், மனிதர்களிடம் இருந்தும் பரவுவது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே 3 பேர் பலியான நிலையில், 89 வயதான ஒரு ஆண் உள்பட மேலும் 3 பேர் இறந்தனர். இதனால் இந்த வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

பன்றிக்காய்ச்சல், எபோலா வைரஸ் நோய் ஆகியவற்றின் காரணமாக பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்த உலக சுகாதார நிறுவனம், இந்த கொரோனா மர்ம வைரஸ் தாக்குதலையொட்டியும், பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவிக்க பரிசீலிக்கிறது.

ஏற்கனவே இந்த வைரஸ் காய்ச்சல் 200-க்கும் மேற்பட்டோரை பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீன புத்தாண்டையொட்டி இந்த வார கடைசியில் பிற நாடுகளில் வசிக்கிற சீன நாட்டினர் தாய்நாடு வருகின்றனர். அவர்கள் புத்தாண்டை கொண்டாடி விட்டு மீண்டும் தாங்கள் வசிக்கிற நாடுகளுக்கு செல்கிறபோது, அவர்களுக்கு ஒருவேளை இது தொற்றினால் அவர்கள் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பிற நாடுகளில் பரவும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்