பாகிஸ்தான் நடத்திய அணு ஏவுகணை சோதனை வெற்றி

பாகிஸ்தான் நடத்திய அணு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது.

Update: 2020-01-23 22:15 GMT
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான், தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆற்றல் வாய்ந்த காஸ்னவி அணு ஏவுகணை சோதனையை கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி நடத்தியது. நேற்று மீண்டும் காஸ்னவி ஏவுகணையை அந்த நாடு சோதித்து பார்த்தது. இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஏவுகணை அணுகுண்டுகளுடன், 290 கி.மீ. தொலைவு வரையில் சென்று இலக்குகளை தாக்கக்கூடியதாகும்.

இதையொட்டி பாகிஸ்தான் ராணுவ செய்தி நிறுவனம் ஐ.எஸ்.பி.ஆர். விடுத்துள்ள அறிக்கையில், “இந்த ஏவுகணை சோதனை பகல் மற்றும் இரவு நேரங்களில் செயல்பாட்டு தயார் நிலை நடைமுறைகளை ஒத்திகை பார்ப்பதை நோக்கமாக கொண்டு, படைகளின் கள பயிற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையை ராணுவ உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

காஸ்னவி அணு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருப்பதை அந்த நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான்கான், முப்படை தளபதிகள் பாராட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்