பெரு நாட்டில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து 5 பேர் பலி

பெரு நாட்டில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாயினர்.

Update: 2020-01-24 22:42 GMT
லிமா,

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து கியாஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி புறப்பட்டு சென்றது. இந்த லாரி லிமாவின் புறநகர் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிக்கெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் இருந்த ஆட்டோ பழுதுபார்க்கும் மையம் மீது மோதியது. மோதிய வேகத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டு டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனை தொடர்ந்து, அங்கு பயங்கர தீவிபத்து நேரிட்டது.

வீடுகள், கடைகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ பரவியது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்