ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவதளம் மீது பீரங்கி குண்டுகள் விழுந்தன: பின்னணி என்ன?

ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவதளம் மீது பீரங்கி குண்டுகள் விழுந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-02-01 23:09 GMT
கெய்ரோ,

ஈராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன.

ஆனால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடந்த சில மாதங்களாக ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் 3-ந்தேதி ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி, ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்தபோது, சர்வதேச விமானநிலையம் அருகே அவரை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது.

அதைத்தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது 8-ந்தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் 34 பேருக்கு மூளைக்காயம் ஏற்பட்டது.

இந்தநிலையில், ஈராக்கில் 2003-ம் ஆண்டு முதல், அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வந்த படைத்தளம் அருகே நேற்றுமுன்தினம் அடுத்தடுத்து 5 பீரங்கி குண்டுகள் விழுந்தன. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. பீரங்கி குண்டு விழுந்ததின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளது.

இதே ராணுவ தளத்தை குறிவைத்து கடந்த நவம்பர் மாதம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்