ஊழல் வழக்கில் தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு பிடிவாரண்டு

ஊழல் வழக்கில் தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

Update: 2020-02-05 23:27 GMT
கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்தவர் ஜேக்கப் ஜூமா. 2009-ல் அதிபராக பொறுப்பேற்றபோதே, இவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1999-ல் துணை அதிபராக இருந்தபோது, பிரான்ஸ் நாட்டிடம் ஆயுதங்கள் வாங்க செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அந்த நாட்டு நிறுவனத்திடம் 2 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் இந்த ஊழல் வழக்குக்கு மத்தியிலும் அடுத்தடுத்து நடந்த அதிபர் தேர்தல்களில் வெற்றி பெற்று தனது பதவியை தக்கவைத்துக்கொண்டார். அதோடு தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கியூபா நாட்டுக்கு சென்றார். அதன் பிறகு உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு எதிரான ஊழல் விசாரணையில் ஆஜராவதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவின் பீட்டர்மெரிட்ஸ்பர்க் நகர ஐகோர்ட்டில் ஜேக்கப் ஜூமாவின் ஊழல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜேக்கப் ஜூமா விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது குறித்து கண்டனம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, ஜேக்கப் ஜூமாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதற்குள் ஜேக்கப் ஜூமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறினர்.

மேலும் செய்திகள்