அமெரிக்கா: கைது நடவடிக்கையின்போது கழுத்தை நெரித்த போலீசார் - கருப்பினத்தவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது போலீசார் கழுத்தை நெரித்ததில் கருப்பினத்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Update: 2024-04-27 09:44 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கேண்டன் நகரில் கடந்த 18ம் தேதி கார் விபத்து ஏற்பட்டது. சாலையோர மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய நபர் காரில் இருந்து இறங்கி அருகில் உள்ள கேளிக்கை விடுதிக்குள் சென்றுள்ளார்.

இதனிடையே, விபத்துகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு கேளிக்கை விடுதிக்குள் சென்றவர் யார் என விசாரித்தனர். அப்போது, விபத்தை ஏற்படுத்தியவர் பிராங்க் டைசன் (வயது 53) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பிராங்க் டைசனை கைது செய்ய போலீசார் கேளிக்கை விடுதிக்குள் சென்றனர். போலீசாரின் உடையில் பொறுத்தப்பட்டிருந்த கேமரா இந்த கைது நடவடிக்கையை பதிவு செய்தது.

கேளிக்கை விடுதிக்குள் போலீசார் நுழைவதை பார்த்த பிராங்க் டைசன், அவர்கள் என்னை கொலை செய்யப்போகிறார்கள், உயர் அதிகாரிக்கு போன் செய்யுங்கள்' என சத்தமாக கூறினார்.

அப்போது விரைந்து வந்த போலீசார், டைசனை கீழே தள்ளி அவரை கைது செய்ய முயற்சித்தனர். இதனால், டைசன் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், போலீஸ்காரர் ஒருவர் டைசனின் கழுத்தை தனது காலால் நெரித்து கைது செய்ய முயன்றுள்ளார். போலீஸ்காரர் கழுத்தை நெரித்ததால் டைசனுக்கு மூச்சுவிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் டைசன், என்னால் மூச்சுவிடமுடியவில்லை. எனது கழுத்தில் இருந்து காலை எடுங்கள் என கதறியுள்ளார். ஆனால், அந்த போலீஸ்காரர், அமைதியாக இருங்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகாது என கூறி சில நிமிடங்கள் கழுத்தை காலால் இறுக்கியுள்ளார்.

இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்ட டைசன் மயக்கமடைந்தார். உடனடியாக அருகில் இருந்த மற்றொரு போலீஸ்காரர், அவர் மூச்சுவிடுகிறாரா? அவருக்கு நாடித்துடிப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், டைசன் எந்தவித அசைவும் இன்றி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டைசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். கைது நடவடிக்கையின்போது போலீசார் கழுத்தை நெரித்ததில் கருப்பினத்தவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, உயிரிழந்த டைசன் கடத்தல் மற்றும் திருட்டு வழக்கில் 24 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று கடந்த 6ம் தேதி தான் சிறையில் இருந்து விடுதலையானார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்காவின் மினியாபொலிசிஸ் நகரில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் போலீசார் கைது நடவடிக்கையின்போது ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவர் உயிரிழந்தார். கைது நடவடிக்கையின்போது அவரது கழுத்தை போலீசார் 5 நிமிடங்களுக்குமேல் நெரித்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி உலக அளவில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்