மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? - டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-02-12 00:00 GMT
வாஷிங்டன், 

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனை டிஜிட்டல் மயமாக்கும் 10 பில்லியன் டாலருக்கான (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் பிரபல பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெற அமேசான் நிறுவனமும் விண்ணப்பித்திருந்த நிலையில், மைக்ரோசாப்ட்டுக்கு பென்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இதனால் கோபம் அடைந்த அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக கூறி பென்டகன் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வாஷிங்டன் நகர கோர்ட்டில் விசாரணைக்கு உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமேசான் நிறுவனம் புதிய மனு ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த மனுவில், ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் தங்களை புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஜனாதிபதி டிரம்ப் செயல்பட்டார் என அமேசான் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், ஒப்பந்த நடைமுறையில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும், அமேசானை ஒழித்துக்கட்ட அவர் உத்தரவிட்டதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ராணுவ மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ், தற்போதைய ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென இந்த மனுவில் அமேசான் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்