ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை: சிறை அதிகாரி கோர்ட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சிறை அதிகாரி கோர்ட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-13 23:30 GMT
மாஸ்கோ,

ரஷிய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விக்டர் சிவிரிதோவ். இவர் அங்குள்ள மத்திய சிறையில் தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தனது பணிக்காலத்தில் கைதிகளின் உறவுக்காரர்களிடம் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 84 ஆயிரம்) வரை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாஸ்கோ நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் விக்டர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் விக்டருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதற்காக அவர் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அவரது வக்கீல் விக்டர் புற்று நோயால் அவதிப்படுவதாகவும் எனவே அவரை சிறைக்கு அனுப்பாமல் வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் வலியுறுத்தினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, விக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்ததும் விக்டர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்