தள்ளாத வயதிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மனைவியை பாசமாக கவனித்துக்கொள்ளும் கணவர்!

சீனாவில் 'கோவிட்-19' என பெயிரிடப்பட்டுள்ள, 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான கணவன், மனைவிக்கு பாசமாக கணவன் தண்ணீர், உணவு அளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Update: 2020-02-14 10:06 GMT
பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதுவரை மொத்தம் 1,483-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில்,  சீன நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் டுவிட்டர் பக்கத்தில் கோவிட்-19  என பெயரிடப்பட்டுள்ள கொரோனா' வைரசால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீடியோ வெளியிடப்பட்டது. அதில், 87 வயதான கணவர், பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வருகிறார்.

அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார். இருவரும் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த வயதிலும் மனைவிக்கு உதவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில், நோய் பாதித்த மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் ,காதலும் வீடியோவை பார்க்கும் அனைவரின் மனதையும் கரைத்துவிடுவதாக உள்ளது.

இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக சமூகவலைதளங்களில்  பலரும் பதிலளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்