சிரியாவில் கார் குண்டு வெடித்து 6 பேர் பலி

சிரியாவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.

Update: 2020-02-17 23:45 GMT
டமாஸ்கஸ், 

சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை பயங்கரவாதிகள் என கூறும் அண்டை நாடான துருக்கி, அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

அந்த நாட்டு ராணுவம் சிரியா எல்லைக்குள் நுழைந்து குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது அங்குள்ள சில நகரங்களை துருக்கி ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த நகரங்களை அவர்களிடம் மீட்க குர்து போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல் அபியாத் நகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அப்பாவி மக்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் குர்து இன போராளிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும், கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்