உக்ரைனில் முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு அரியவகை மரபணு நோயால் சோகம்

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி அரியவகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாள்.

Update: 2020-02-18 00:15 GMT
கீவ், 

உக்ரைன் நாட்டை சேர்ந்த இவானா என்ற பெண்ணுக்கு கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அன்னா சாகிடோன் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு ‘புரோஜீரியா’ என்ற அரியவகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

உலகம் முழுவதிலும் வெறும் 160 பேருக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பு உள்ளது. இந்த நோய் தாக்கியவர்கள் சிறு வயதிலேயே முதுமையை அடைவார்கள். அதாவது அவர்களது உடல் உள் உறுப்புகள் வேகமாக வளர்ந்து முதுமை பருவம் வந்துவிடும்.

அந்த வகையில் இவானாவின் மகள் அன்னா சாகிடோன் 8 வயதில் 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தாள். வெறும், 7 கிலோ எடைகொண்ட அந்த சிறுமி உடல்நல குறைவு காரணமாக, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், ‘புரோஜீரியா’ நோயின் தாக்கம் அதிகமானதால் சிறுமியின் உடல் உள் உறுப்புகள், அடுத்தடுத்து செயலிழந்தன. சிறுமியை காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடினர்.

ஆனாலும் அவர்களின் முயற்சி பலனளிக்காததால் கடந்த சனிக்கிழமை சிறுமி அன்னா சாகிடோன், பரிதாபமாக உயிரிழந்தாள்.

மேலும் செய்திகள்