சிரியாவில் குண்டு வெடிப்பு பயத்தை போக்க மகளை திசை திருப்பும் தந்தை ; வைரலாகும் வீடியோ

என்ன ஒரு சோகமான உலகம் இது! சிரியாவில் குண்டு வெடிப்பு பயத்தை போக்க மகளை திசைதிருப்பும் தந்தை

Update: 2020-02-18 12:32 GMT
இட்லிப்

சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை பயங்கரவாதிகள் என கூறும் அண்டை நாடான துருக்கி, அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அந்த நாட்டு ராணுவம் சிரியா எல்லைக்குள் நுழைந்து குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது அங்குள்ள சில நகரங்களை துருக்கி ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அந்த நகரங்களை அவர்களிடம் மீட்க குர்து போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இட்லிப் நகரில் ஆங்காங்கே குண்டு வெடிக்கிறது. இந்த நிலையில் அந்த நகரில் அப்துல்லா என்பவர் தனது 4 வயது மகள் செல்வாவுடன் தங்கியுள்ளார். அடிக்கடி குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டு செல்வா பயப்படுவார் என்பதற்காக ஒரு விஷயத்தை அப்துல்லா செய்துள்ளார்.

அதாவது ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் அது ஒரு விளையாட்டு என கூறி மகளை திசை திருப்பும் அப்துல்லா அவளை சிரிக்க வைக்கிறார். குழந்தை செல்வாவும் குண்டு வெடிப்பது ஒரு விளையாட்டு என நினைத்து பயப்படாமல் சத்தம் போட்டு சிரிக்கிறார். இந்த வீடியோவை அலி முஸ்தபா என்ற பத்திரிக்கையாளர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், என்ன ஒரு சோகமான உலகம் இது! மகள் பயத்தை திசை திருப்ப இப்படியொரு விஷயத்தை தந்தை செய்கிறார் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகள்