ஆப்பிரிக்க நாட்டில் கொடூரம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 24 பேர் பலி

ஆப்ரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பலியாகினர்.

Update: 2020-02-19 00:00 GMT
வாகடூகு, 

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் யாகா மாகாணத்தின் பான்சி நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதில் கலந்துகொண்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையை முடித்துவிட்டு தேவாலயத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்கள் அனைவரையும் துப்பாக்கிமுனையில் சுற்றிவளைத்தனர். பின்னர் அந்த கூட்டத்தில் இருந்து குறிப்பிட்ட சிலரை வெளியே வர சொல்லி அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் ஒரு பாதிரியார் உள்பட 24 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து, பயங்கரவாதிகள் தேவாலயத்துக்கு தீவைத்தனர். மேலும் வாலிபர்கள் 3 பேரை துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்