ஆமதாபாத் நகரத்தில் டிரம்ப் செல்லும் வழியில் வரவேற்க 2 லட்சம் பேர் வருவார்கள்; புதிய தகவல்

ஆமதாபாத் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செல்லும் வழியில் அவரை வரவேற்க 2 லட்சம் பேர் வருவார்கள் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-02-21 00:15 GMT
ஆமதாபாத், 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மனைவி மெலனியாவுடன் 24-ந்தேதி ஆமதாபாத் வருகிறார். ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் வந்திறங்கும் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் நேரில் வரவேற்கிறார்.

அந்த வரவேற்பை தொடர்ந்து டிரம்ப் தம்பதியர், பிரதமர் மோடி ஆகியோர் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை வழியாக கார்களில் செல்கிறார்கள். சாலையின் இருபுறமும் நின்று அவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். பின்னர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சாலை வழியே மீண்டும் கார்களில் செல்கிறார்கள். அங்கு ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக டிரம்ப் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆமதாபாத்தில் தான் செல்லும் பாதையில் வரவேற்க 7 மில்லியன் (70 லட்சம்) மக்கள் இருப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆமதாபாத் நகர மக்கள் தொகையே 70 லட்சம் முதல் 80 லட்சம் வரைதான். எனவே டிரம்பை வரவேற்க எப்படி 70 லட்சம் பேர் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஆமதாபாத் மாநகராட்சி கமிஷனர் விஜய் நெஹ்ரா டிரம்பை வரவேற்க ஏறத்தாழ 1 லட்சம் பேர் வருவார்கள் என கடந்த வாரம் தெரிவித்தார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “அமெரிக்க ஜனாதிபதி செல்லும் 22 கி.மீ. சாலை வழி பயணத்தில் அவரை வரவேற்க 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவது உறுதியாகி உள்ளது. இந்திய கலாசாரத்தை உலகத்துக்கு காட்டுவதற்கு ஆமதாபாத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறி உள்ளார்.

இந்த நிலையில் டிரம்ப் வருகை தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி, காந்தி நகரில் நேற்று உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அவரிடம் மாநில உள்துறை ராஜாங்க மந்திரி பிரதீப் சிங் ஜடேஜா, போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார். கிரிக்கெட் மைதானத்துக்கு மிக முக்கிய பிரமுகர்களை அழைத்துச்செல்வது, அவர்களுக்கான இருக்கை வசதி செய்து தருவது பற்றியும், கலாசார நிகழ்ச்சிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

டிரம்ப் செல்கிற பாதையில் 50 மேடைகள் அமைத்து அவற்றில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்; அந்தப் பாதை முழுவதும் அழகுபடுத்தப்படும் என்று ஆமதாபாத் மாநகராட்சி கமிஷனர் விஜய் நெஹ்ரா தெரிவித்தார். மேலும் டிரம்ப் செல்லும் வழியில் அவரை வரவேற்க 2 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்