உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு: தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறிய சிறுவன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ

உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்த சிறுவன், தனது தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2020-02-21 21:29 GMT
கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவார்டன், நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான்.

அவலமான தோற்றம் காரணமாக குவார்டனை, பள்ளியில் சக மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவன் மிகவும் மனமுடைந்து போனான்.

இது குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுத குவார்டன், தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்ள தூக்குகயிறு அல்லது கத்தி போன்ற ஏதாவது ஆயுதம் தரும்படி கேட்டு மன்றாடினான்.

மகனின் கதறலையும், கண்ணீரையும் பார்த்து உடைந்துபோன யர்ராகா, கொடுமைப்படுத்துதலின் பேரழிவு விளைவுகள் குறித்து உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குவார்டன் தூக்கு கயிறு கேட்டு கதறி அழுத காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார்.

வீடியோன வெளியான சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அதை பார்த்தனர். அதனை தொடர்ந்து, யர்ராகாவும், குவார்டனும் நம்பிக்கையூட்டும் ஆதரவு கருத்துகளால் மூழ்கடிக்கப்பட்டனர்.

அதோடு, பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் அந்த வீடியோவை இணையவாசிகள் டுவிட்டர் உள்ளிட்ட பிற சமூகவலைத்தளங்களிலும் பகிர்ந்து, குவார்டனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.

அதுமட்டும் இன்றி தேசிய ரக்பி போட்டியின் போது குவார்டனை விளையாட்டு மைதானத்துக்கு வரவழைத்து கவுரப்படுத்த அந்த விளையாட்டு வீரர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்