ரூ.3¾ கோடி நிதியை ஏற்க மறுத்த சிறுவன்

உருவ கேலிக்கு ஆளான சிறுவன் தனக்கு வந்த ரூ.3¾ கோடி நிதியை ஏற்க மறுத்தான்.

Update: 2020-02-28 22:31 GMT
சிட்னி,

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த உடல் வளர்ச்சி குறைபாடுடைய சிறுவன் குவார்டன் (வயது 9). சக மாணவர்களால் உருவ கேலிக்கு ஆளான இவன் தற்கொலை செய்து கொள்ள தனது தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறி அழுத வீடியோ உலகம் முழுவதும் பரவி பலரின் நெஞ்சை உலுக்கியது.

அதை தொடர்ந்து சர்வதேச அளவில் குவார்டனுக்கு ஆதரவாக குரல் எழுந்தது. மேலும் ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற, ‘ரக்பி சாம்பியன்ஷிப்' விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் கவுரவம், குவார்டனுக்கு அளிக்கப்பட்டது.

இதனிடையே, குவார்டனை போலவே வளர்ச்சி குறைபாடு கொண்ட பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், இணையத்தின் வாயிலாக சிறுவனுக்காக நிதி திரட்டினார்.

இதில் 4 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3¾ கோடி) நிதி கிடைத்துள்ளது. குவார்டனையும் அவனது தாயையும் டிஸ்னிலேண்டுக்கு அனுப்புவதற்காக இந்த நிதி திரட்டப்பட்டது.

ஆனால் இந்த நிதியை பெற மறுத்த குவார்டன் தன்னை போல் குள்ளமானவர்களின் நலனுக்காக பாடுபடும் அறக்கட்டளைகளுக்கு இத்தொகையை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளான்.

மேலும் செய்திகள்