அமெரிக்காவில் டிரம்ப் மாநாட்டில் கலந்துகொண்டவருக்கு கொரோனா

அமெரிக்காவில் டிரம்ப் மாநாட்டில் கலந்துகொண்டவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.

Update: 2020-03-08 23:16 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் வாஷிங்டனில் 16 பேரும், கலிபோர்னியா மாகாணத்தில் ஒருவரும் பலியான நிலையில் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 2 முதியவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350- ஐ நெருங்கி உள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் டிரம்ப், மைக் பென்ஸ் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக டிரம்பிடம் பேட்டி கண்ட பத்திரிகையாளர்கள் “மேரிலாந்து அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டபின் கொரோனா வைரசுக்கு ஆளாக நேரிடும் என்று கவலைப்படுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “நான் சிறிதும் கவலைப்படவில்லை” என்று கூறினார்.

மேலும் வைரஸ் பரவுவதால் எந்தவொரு அரசியல் பேரணியையும் தனது நிர்வாகம் ரத்து செய்யாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்