சூடானில் பரபரப்பு: குண்டு வெடிப்பில் பிரதமர் உயிர் தப்பினார்

சூடானில் குண்டு வெடிப்பில் அந்நாட்டு பிரதமர் உயிர் தப்பினார்.

Update: 2020-03-09 23:00 GMT
கார்டூம்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக இருந்த ஓமர் அல் பஷீருக்கு எதிராக கடந்த ஆண்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நாட்டு ராணுவம் ஓமர் அல் பஷீரை கைது செய்து, ஆட்சியை கைப்பற்றியது.

ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ராணுவமும், மக்களும் இணைந்து ஆட்சியை வழிநடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்தல்லா ஹம்டோக் என்பவர் சூடானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். எனினும் ஹம்டோக் மூலம் நாட்டில் மறைமுக ராணுவ ஆட்சியே நடைபெற்றுவருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் ஹம்டோக் நேற்று தலைநகர் கார்டூமில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை குறிவைத்து குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. எனினும் இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தன்னை கொலை செய்ய சதி நடந்ததையும், அதில் தான் தப்பியதையும் உறுதிப்படுத்தியுள்ள ஹம்டோக் தற்போது தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடி சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இ்ந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு ராணுவம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

மேலும் செய்திகள்