ரஷியாவிலும் வாரிசு அரசியல்: புதின் உறவினர் அரசியல் கட்சி தொடங்கினார்

ரஷியாவிலும் வாரிசு அரசியல் உருவாகி உள்ளது. அங்கு அதிபர் புதினின் உறவினர் அரசியல் கட்சி தொடங்கினார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-21 21:47 GMT
மாஸ்கோ,

ரஷியாவிலும் வாரிசு அரசியல் தலை தூக்குகிறது. அந்த நாட்டின் அதிபரான விளாடிமிர் புதினின் ஒன்று விட்ட சகோதரர் இகோர் மகன் ரோமன் புதின், மக்கள் வணிக கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு அங்கு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ரோமன் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில், “ எனது கட்சி வலதுசாரி பழமைவாத கட்சியாக செயல்படும். சிறு வணிகர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் எனது கட்சி ஆதரவு தரும். நாடாளுமன்ற தேர்தலில் (புதின் ஆதரவு) ஐக்கிய ரஷிய கட்சிக்கு ஆதரவு அளிப்போம்” என்று கூறினார். 42 வயதான இவர், ரஷிய அதிபர் புதினைப் போலவே ரஷியாவின் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் ஆவார். இவர் புதின் ஆலோசனை நிறுவனத்தில் இயக்குனர் பொறுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வாரிசு அரசியல் பற்றி கேள்வி எழுப்பியபோது, ரோமன் புதின், “எனக்கு என்று சொந்தமாக சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதை அரசியல் செயல்பாடுகள் வழியாக காட்டுவேன், அமெரிக்காவில்கூட புஷ் குடும்பத்தினர் நிறைய பேர் அரசியலில் கவர்னர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். புதினுடன் போட்டி போடுவது எனது நோக்கம் அல்ல. நமது நாட்டுக்கு ஒரு வலுவான தலைவர் தேவை. புதினுக்கு மாற்றாக தலைவர்களே கிடையாது” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்