இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-03-25 23:16 GMT
லண்டன், 

சீனாவில் தோன்றி மற்ற நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் தனது இலக்காக்கி வருகிறது. அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என சர்வதேச அளவில் பல முக்கிய பிரமுகர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

அந்தவகையில் இங்கிலாந்து இளவரசர் சார்லசும் (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வைரஸ் அறிகுறி காணப்பட்டதால் அபெர்தீன்ஸ்ஹையரில் உள்ள தேசிய சுகாதார பணிகள் குழுவினர் சார்லசுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும், அவர் தொடர்ந்து ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பதாகவும் அவரது கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

உயிர்ப்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் இளவரசர் சார்லசையும் தொற்றியிருக்கும் விவகாரம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்