ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - தாய்லாந்து அரசு உத்தரவு

தாய்லாந்தில் ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-03-25 23:32 GMT
பாங்காக், 

ஒட்டுமொத்த உலகையும் பெரும் இன்னலுக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பெரிய, சிறிய நாடுகள் என்ற பேதமின்றி அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மரணங்களையும், புதிய நோயாளிகளையும் உருவாக்கி வரும் இந்த வைரஸ் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு மிரட்டும் கொரோனாவில் இருந்து தப்புவதற்காக அனைத்து நாடுகளும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வருகின்றன. பல நாடுகளில் தேசிய ஊரடங்கும், நெருக்கடி நிலையும் கூட பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்றும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதன் மூலம் அங்கு மொத்த எண்ணிக்கை 900-ஐ கடந்து விட்டது. 4 பேர் மரணத்தையும் தழுவி விட்டனர். எனவே நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அந்தவகையில் ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்துதான் பயணிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக ரெயில் நிலைய வாசல்களில் முகக்கவசம் விற்கப்படும் என அறிவித்துள்ள அரசு, அங்கேயே பயணிகள் தங்கள் உடல் வெப்ப பரிசோதனையையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளது.

நியூசிலாந்தில் நேற்றும் சுமார் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அரசு பிறப்பித்து உள்ளது. கொரோனா வைரசால் நாட்டில் வரலாறு காணாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக அரசு கூறியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் மிக அதிக அளவாக பிரேசிலில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு பலி எண்ணிக்கையும் 46 ஆகி விட்டது. இதுவும் தென் அமெரிக்க கண்டத்தில் மிக அதிக அளவாகும்.

பாகிஸ்தானில் வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக அனைத்து விதமான உள்நாட்டு விமான போக்குவரத்தையும் இன்று காலை 6 மணி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை அரசு ரத்து செய்து உள்ளது. முன்னதாக நாடு முழுவதும் 31-ந்தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்