கொரோனா வைரஸ் தாக்கி மரண படுக்கையில் ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ‘டி.ஜே.’ டேனி சர்மா - உருக்கமான தகவல்கள்

கொரோனா தாக்கி மரண படுக்கையில் இருந்த போது டி.ஜே. டேனி சர்மா, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுகள் தெரிய வந்துள்ளன.

Update: 2020-03-29 00:07 GMT
லண்டன், 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உக்பிரிட்ஜ் என்ற இடத்தில் வசித்து வந்தவர் டேனி சர்மா (வயது 38). இவர் விருந்து மற்றும் விழாக்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிற கலைஞராக (டிஸ்க் ஜாக்கி) இருந்து வந்தார்.

சமீப காலமாக நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த டேனி சர்மாவை கொரோனா வைரசும் விட்டு வைக்கவில்லை. கடந்த 26-ந் தேதி அதிகாலையில் அவர் மரணம் அடைந்தார்.

முன்னதாக ஆஸ்பத்திரியில் மரண படுக்கையில் இருந்தபோது அவர் தனது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் உருக்கமானதாக அமைந்துள்ளது.

22-ந் தேதி அவர் கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியானவுடன் மிடில்செக்ஸ் பகுதியில் உள்ள ஹிலிங்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட முதல் பதிவு, “உண்மையிலேயே என் வாழ்க்கை உறிஞ்சப்படுகிறது. என்னையும் கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை” என்பதாகும்.

அவரது நிலைமை மோசமான உடன் 23-ந் தேதி ஹேமர்ஸ்மித் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

“என் உடல்நலம் மீண்டு வர ஒரு வார காலம் கோமாவில் வைத்திருக்க டாக்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் என் உடல்நிலை அதற்கு ஒரு வாய்ப்பாக அமையவில்லை” என்று அவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

24-ந் தேதி கட்டை விரலை உயர்த்தியவாறு அவர் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறபோது அழகாக இருக்கிறது. ஆனால் சுவாசிக்கவே கஷ்டமாக இருக்கிறது. இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.

இதுதான் அவரது கடைசி பதிவு. அவரது போராட்டம் வெற்றியை தரவில்லை. மரணத்தைத்தான் தந்து விட்டது.

டேனி சர்மாவின் சகோதரர் வின்னி சர்மா, “கொரோனா வைரசின் தீவிரத்தை மக்கள் உணரவேண்டும் என்பதற்காகத் தான் என் அண்ணன் பேஸ்புக்கில் தனது உடல்நிலை குறித்த பதிவுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். அவர் பரந்த இதயத்துடன் கூடிய அற்புதமான மனிதர். அவரை இனி நாங்கள் காண முடியாது. அவரது ஆன்மா அமைதி பெறட்டும்” என்று கூறி கண் கலங்கினார்.

இப்போது இவரும், இவரது தாயாரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்