இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 563 பேர் பலி; அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 563 பேர் பலியாகி உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-04-01 15:46 GMT
பிரிஸ்டல்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199 நாடுகளில் பரவி விட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கிவிடாமல் இருக்க இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத்தும், அவரது கணவர் பிலிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறி, வின்ட்சர் கோட்டையில் பாதுகாப்பாக உள்ளனர்.

ஆனால் அவர்களது மூத்த மகன் இளவரசர் சார்லசுக்கு (வயது 71) கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 26ந்தேதி உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவியும் இளவரசியுமான கமிலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் இருவரும் பால்மோரல் எஸ்டேட் மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதியானது.

தொடர்ந்து அந்நாட்டில் வைரஸ் தீவிரமுடன் பரவி வரும் நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  எனினும், வைரஸ் பாதிப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இதுபற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று (மார்ச் 31) மாலை 5 மணிவரை 2 ஆயிரத்து 352 பேர் பலியாகி உள்ளனர்.

29 ஆயிரத்து 474 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளை விட 4 ஆயிரத்து 324 அதிகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு முதன்முறையாக ஒரே நாளில் 563 பேர் பலியாகி உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்