அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது: ஜனாதிபதி டிரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் ஜனாதிபதி டிரம்புக்கு 2-வது முறையாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2020-04-03 23:49 GMT
வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதே போல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2½ லட்சத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் டிரம்பை சந்தித்த பிரேசில் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, டிரம்புக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

அதனை தொடர்ந்து, டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்குமே வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை டாக்டர் சீன் கான்லி தெரிவித்தார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் ஜனாதிபதி டிரம்புக்கு 2-வது முறையாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதிலும் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் டாக்டர் சீன் கான்லி கூறினார்.

மேலும் செய்திகள்