இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி

இங்கிலாந்தில், இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர், கொரோனா வைரசுக்கு பலியானார்.

Update: 2020-04-07 23:04 GMT
லண்டன், 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திர குமார் ரத்தோட் என்பவர், இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, கர்டிப் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

ஜிதேந்திர குமார் ரத்தோட், இந்தியாவில் மருத்துவம் படித்தவர். 1995-ம் ஆண்டுவாக்கில், இங்கிலாந்தில் வேல்ஸ் பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியை தொடங்கினார். சில ஆண்டுகள் வேறு நாட்டில் பணியாற்றி விட்டு, 2006-ம் ஆண்டு மீண்டும் வேல்ஸ் ஆஸ்பத்திரிக்கு திரும்பினார்.

அவரது மறைவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரி இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், “ஜிதேந்திர குமார் ரத்தோட், மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். நோயாளிகள் மீது கரிசனம் உள்ளவர். அதனால் எல்லோராலும் விரும்பப்பட்டார். அற்புதமான மனிதர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்